Loading

Saturday, November 14, 2009

போர் குற்றங்களுக்காக இலங்கை அரசினை விசாரணை கூண்டில் நிறுத்த வேண்டும் - அருந்ததி ராய்


ஸ்ரீ லங்கா கார்டியன் பத்திரிக்கையில் வெளிவந்த அருந்ததி ராயின் பேட்டியில் இருந்து சில பகுதிகள்.


...நிலைமை முற்றிலும் மோசமாக இருக்கிறது. நான் (இலங்கை) முகாம்களை நேரிடையாக பார்வையிடவில்லை. ஆனால் அங்கே மிக பெரிய மனித உரிமை மீறல் பிரச்சனை நடந்து கொண்டிருப்பது வெளிப்படை. அதை உலகம் அலட்சியபடுத்துகிறது.  லட்சக்கணக்கான மக்களை முகாம்களில் அடைத்து வைத்து அவர்கள் மீது வெற்றி கொக்கரிப்பு செய்வது என்பது அதிர்ச்சியான விஷயம். மனதை உறைய செய்யும் கொடுமை. அரசாங்கம் அங்கு நடப்பதை வெளியுலகம் அறிய முடியாதபடி செய்து இருக்கிறது. ஆனாலும் அதை தாண்டி வெளி வந்த சில தகவல்களை பாருங்கள்.  (நாஜிகளின்) முகாம் என அதற்கு பெயரிடுவது தான் பொருத்தமாக இருக்கும்.  இவை எல்லாம் பொய் என்றால் இலங்கை அரசு எதற்கு மீடியாவை முகாம்களுக்கு போக அனுமதி மறுக்கிறது...

...இந்திய மக்கள் பல்வேறுபட்ட பின்புலங்களை உடையவர்கள். இங்குள்ள ஊடகங்கள் இலங்கையில் என்ன நடந்தது என்பதை கவனமாய் தவிர்த்து விட்டன. அதனாலே மக்களுக்கு இல்ங்கையில் நிலவும் சூழல் பற்றி ஒன்றுமே தெரியாது. இந்தியாவில் உள்ள அதிகாரத்தின் ஒரு பகுதி அரசு இயந்திரத்தின் வலிமையின் மீது மையல் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் மக்களின் குரலை நசுக்கி விட இயலும் என நினைக்கிறார்கள். இவர்களுக்கு இஸ்ரேல் பிடித்திருக்கிறது. இஸ்ரேல் கடைபிடிக்கும் வழிமுறைகள் பிடித்திருக்கிறது. இது வெட்க பட வேண்டியது. ஓர் இனவாரியான மைனாரிட்டி மக்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. அரசு பயங்கரவாதத்தினை காஷ்மீரில், நாகாலாந்தில் பார்க்க முடியும்...


...இலங்கை அரசாங்கத்தின் வழிமுறைகளை இந்திய அரசு மாவோயிஸ்டகளுக்கு எதிராக பயன்படுத்தும் என நாங்கள் நினைக்கிறோம். வளங்கள் நிறைந்த காட்டு பகுதியினை தொழில் அதிபர்களுக்காக இந்திய அரசு கைப்பற்ற நினைக்கிறது...

...கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான பணம் இதில் சம்பந்தபட்டு இருப்பதால் இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிய போவதில்லை. நம்மை சுற்றி பாருங்கள், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, இப்போது இந்தியா எல்லா இடங்களிலும் உள்நாட்டு போர் நடக்கிறது. இது முற்றிலும் கவலையளிக்கக்கூடிய நிலை…

மேலதிக வாசிப்பு
அருந்ததி ராயின் முழு பேட்டி

Read more...

Tuesday, October 27, 2009

ஆதியில் ஒன்றுமே இல்லை

நாங்கள் சில நூறு பேர் இருந்தோம்.
ஏழெட்டு மின்னல் கீற்றுகள்
ஒரே சமயத்தில் வானத்தில் தோன்றுவதை பார்த்தோம்.
அடர் கருப்பினூடாக அந்த மின்னல் கிழிசல்கள்
அவரது வருகைக்கு முன்னுரை எழுதின.

குழந்தை அழும் சத்தம்.
அதை அதட்டும் ஒலி.
அழுகை கட்டுபடாமல் பெரும் சத்தமாகி
தொற்று போல பலருக்கும் பரவுகிறது.
ஒரு பெண் தேம்பி தேம்பி அழுகிறாள்.
முதியவர் சரிந்து தரையில் விழுகிறார்.
ஒரு கூட்டுப் பாடல் போல அழுகை ஒலி
பெரும் வடிவெடித்து வெடிக்கிறது.

ஒரு பாம்பு நெளிவது போல
எங்களுக்கு அடியில் பூமி நெளிகிறது.
ஒரு பெண் பயந்து அலறுகிறாள்.
காற்று எங்களது முகத்தில் மழைத்தூறலை வீசி அடிக்கிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அது நிகழ்ந்தது.

Read more...

Sunday, October 11, 2009

இலங்கை முகாம்களின் அவல நிலை - நேரடி சாட்சியங்கள்!


கடும் தண்ணீர் தட்டுபாடு, அச்சுறுத்தும் மழைக்காலம், டெண்ட் கூரைகளை பெயர்த்தெடுக்கும் பலத்த காற்று, கழிவறைகள் வழிந்து வாழும் டெண்ட்களுக்கு இடையில் ஓடும் சுகாதாரமற்ற நிலை, இட நெருக்கடி, ராணுவத்தினர் செய்யும் சித்ரவதைகள், அவ்வபோது ராணுவத்தினரால் காணாமல் போகும் முகாம்வாசிகள், முடக்கபட்ட சுதந்திரம் என்று தற்போது இலங்கையில் உள்ள தமிழர் முகாம்கள் பெரும் அவல நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாய் அங்கு நடக்கும் விஷயங்கள் பற்றிய நேரடி சாட்சியங்களை Human Rights Watch என்கிற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் சமீபத்தில் வெளியிட்டது. அதன் சுருக்கம் கீழே கொடுக்கபட்டு இருக்கிறது.

இலங்கையில் இன்று இரண்டறை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் சிறை வைக்கபட்டு இருக்கிறார்கள். ஐ.நாவின் கூற்றுபடி சரியாக 2,55,551 பேர். வவூனியா மாவட்டத்தில் உள்ள மானிக் முகாமில் தான் அதிகமானோர் தங்க வைக்கபட்டிருப்பதாக தெரிகிறது.

மானிக் முகாமிற்கு அருகே உள்ள ஒரு நதியில் இருந்து பைப்லைன் மூலமாக தான் தண்ணீர் முகாமிற்கு அளிக்கபட்டு வந்தது. ஆனால் அக்டோபர் ஐந்தாம் தேதி இதன் முக்கியமான பம்பிங் யூனிட் அணைக்கபட்டது. நதியில் மிக குறைவான அளவு நீரோட்டம் இருப்பதே இதற்கு காரணம் என சொல்லபட்டது. இதன் காரணமாக முகாம்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு முப்பது லிட்டர் தண்ணீர் தான் அளிக்கபடும் என நிபந்தனை செய்திருக்கிறார்கள். ஐ.நாவின் அகதிகளுக்கான நிறுவனம் ஒரு தனி நபருக்கு ஒரு நாளைக்கு பதினைந்து லிட்டர் தண்ணீர் கொடுக்கபட வேண்டுமென பரிந்துரை செய்தது மீறப்பட்டு இருக்கிறது.

முகாமில் உள்ள 38 வயதான ஜீவிதா, "இன்று காலை நான் என் குடும்பத்திற்காக இருபது லிட்டர் தண்ணீர் வாங்கினேன். என் குடும்பத்தில அஞ்சு பேர். நாளை காலை வரை வேற தண்ணீ கிடைக்காது. நாங்க குடிக்கிறதுக்கு, சமைக்கிறதுக்கு, துணி துவைப்பதற்கு, குளிப்பதற்கு எல்லாம் இவ்வளவு தண்ணீ தான். வேற கிடையாது. மூணு நாளா எங்க குடும்பத்துல யாருமே குளிக்கலை. கேம்ப் நிர்வாகிகளுக்கு இத பத்தி கவலையே கிடையாது," என்று சொன்னார்.

முப்பது வயது ஆனந்தி தனது ஒரு வயது மகனுடன் முகாமில் இருக்கிறார். "இன்னிக்கு நாலறை மணி நேரமா கியூவுல நின்றிருந்தேன். அதுக்கு மேல நிற்க முடியல்லை. ரொம்ப அசதியாயிடுச்சு. நேத்து நடு ராத்திரியில் இருந்தே கியூவுல நின்னு காலையில ஒன்பது மணிக்கு தான் தண்ணீ கிடைச்சுது. முப்பது லிட்டர் கிடைச்சுது. எனக்கு பரவாயில்லை, நானும் என் மகனும் தான். ஆனா பத்து பேர் குடும்பத்துல இருந்தாலும் இவ்வளவு தண்ணீர் தான் குடுக்கிறாங்க. அவங்க பாடு இன்னும் கஷ்டம்," என்கிறார் ஆர்த்தி.

முப்பத்தி இரண்டு வயதான மாதவி," தண்ணீ கஷ்டத்துல மக்கள் ரொம்ப துவண்டு போயிட்டாங்க. இங்க ரொம்ப நிலைமை சிக்கலா இருக்கு. ஏழாம் தேதி திடீரென்று அரை மணி நேரம் தண்ணீ வந்தது. மக்கள் எல்லாம் பக்கெட்டை தூக்கிட்டு ஓடி போய் அடிதடி தள்ளுமுள்ளாகி பெரிய சண்டை ஆகிடுச்சு. ஒருத்தருக்கொருத்தர் வாய் தகராறு ஆகி கற்கள் எல்லாம் வீசிக்கிட்டாங்க. நாளைக்கு இதே நிலைமை இருந்தா இந்த முகாம் முள்வேலிகளை தூக்கி எறிஞ்சிட்டு எல்லாரும் நதிக்கு போய் நாங்களா தண்ணீர் பிடிப்போம்னு பேசிக்கிட்டாங்க," என்று நடந்ததை சொன்னார்.

கடந்த இரண்டு வாரங்களாக வவூனியா மானிக் முகாம்களில் பலத்த காற்று அடிப்பதால் முகாம் கூரைகள் பல இடங்களில் அறுந்து விட்டது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் வசிக்கும் குமரவேல் என்பவர்," மரத்து கிளைகள் எல்லாம் பலத்த காத்துல உடைஞ்சு முகாம் கூரைங்க மேல விழுது. டென்ட்டிற்கு வெளியே தான் சமையல் செய்ய வேண்டியதிருக்கு. பலத்த காத்துனால தூசியும் மண்ணும் சாப்பாட்டுல விழுது. இங்க வாழறது ரொம்ப கடினமான விஷயம்," என்கிறார்.

வவூனியாவில் உள்ள மானிக் முகாமின் இரண்டாவது பிரிவில் குமரவேல் தற்போது இருக்கிறார். இங்கு உள்ள இடப்பற்றாகுறை காரணமாக அவருடைய குடும்பத்தில் உள்ள ஐந்து பேர் மற்றும் வேறொரு குடும்பத்தை சார்ந்த நான்கு பேர் ஒரே டெண்ட்டில் வசிக்க வேண்டியதிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைத்த அளவுகள்படி பார்த்தால் இந்த இரண்டாவது பிரிவில் 29,000 பேருக்கு குறைவாக தான் தங்க வைக்கபட முடியும். ஆனால் உண்மையில் இங்கு 52,000 பேர் வசிக்கிறார்கள். இரவுகளில் பெண்கள் டெண்ட்களில் தூங்குகிறார்கள். ஆண்கள் டெண்ட்டிற்கு வெளியே தூங்க வேண்டியதிருக்கிறது. அக்டோபர் மாதம் வழக்கமாய் வரும் மழைக்காலம் தொடங்கி விட்டால் தங்களது நிலை என்னாவாகும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்கிறார் குமரவேல். "போன மாசம் கடுமையா மழை பெய்ஞ்சுது. இங்க மழை தண்ணீ ஓடறதுக்கு வழியில்லை. அது அப்படியே தேங்கிடுது. அப்புறம் நாங்க நடக்கவே முடியாத நிலைமை வந்துடுது," என்று கவலைபடுகிறார் குமரவேல்.

கடந்த கடும்மழை காரணமாக கழிவறையில் இருந்து மல கழிவுகள் டெண்ட் வழியாக ஓட தொடங்கி விட்டது. இத்தகைய அசாதாரண வாழ்க்கை சூழலில் முகாம்வாசிகள் ராணுவத்தினருடன் சில சமயம் மோதல்களில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வருகின்றன. செப்டம்பர் 26-ம் தேதி ராணுவத்தினர் இப்படி ஏற்பட்ட மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்காக கூட்டத்தினை பார்த்து சுட்டிருக்கிறார்கள். இதில் இருவருக்கு காயமேற்பட்டு இருக்கிறது. ஒரு குழந்தையினை துப்பாக்கி குண்டு தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதை பற்றி முகாம் நிர்வாகம், "கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள்," என்று சொல்லியிருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

வவூனியாவில் உள்ள மானிக் முகாமில் முதல் பிரிவிற்கு இரண்டாம் பிரிவிற்கும் இடையில் தடுப்பு அமைக்கபட்டிருக்கிறது. Zone one & two என்று இவை அழைக்கபடுகின்றன. இந்த இரு பிரிவிற்கு இடையே உள்ள மக்கள் தங்களது உறவுகளை சந்திக்க சிலசமயம் அனுமதிக்கடுகிறார்கள். முதல் பிரிவில் சமையல் செய்ய விறகுகள் கிடைப்பதில்லை என்பதால் அதற்காகவும் மக்கள் இரண்டாம் பிரிவிற்கு போகிறார்கள். அன்று மாலை ஐந்தரை மணிக்கு இந்த பிரிவுகளுக்கு இடையிலான ரோட்டினை கடந்து போக அனுமதி வேண்டி மக்கள் நீண்ட கியூவில் நின்று காத்து இருந்தார்கள். அப்போது விறகுகளை சுமந்தபடி ரோட்டினை கடந்த ஒரு மனிதனை ராணுவத்தினர் எந்த காரணமும் இல்லாமல் தாக்க துவங்கியிருக்கிறார்கள். மக்கள் இதனை தடுக்க முயன்ற போது மேலும் ராணுவத்தினர் அங்கு கூடி முகாம் மக்களை அடித்து இருக்கிறார்கள். ஒரு ராணுவ வீரன் கையெறி குண்டினை கூட்டத்தின் மீது எறிவதாக தூக்கி காட்டியிருக்கிறான். அதற்கு அடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் தான் இருவருக்கு காயமேற்பட்டு இருக்கிறது. இதற்கு பிறகு வேறொரு ராணுவ வீரன் முதலில் அடிபட்ட ஆள் கொணடு வந்த விறகு கட்டின் மேல் வெடிகுண்டினை பொருத்தி அதனை தனது செல்போன் கேமராவில் படமெடுத்து இருக்கிறான். இதனை தொடர்ந்து பத்தொன்பது பேர் கைது செய்யபட்டார்கள். அவர்களில் சிலர் மட்டுமே பிறகு விடுவிக்கபட்டார்கள். கைது செய்யபட்டவர்களை ராணுவத்தினர் கடுமையாக அடித்து சித்ரவதை செய்ததாக சொல்லபடுகிறது.

செப்டம்பர் 23-ம் தேதி இது போல வவூனியாவில் உள்ள மற்றொரு முகாமில் (பூந்தோட்டம் முகாம்) ராணுவத்தினர் முகாம்வாசிகளை அடித்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் அங்கு ஒரு முகாம்வாசி திடீரென ராணுவத்தினரால் வேறு இடத்திற்கு அழைத்து செல்லபட இருந்தார். அதனை மக்கள் தட்டி கேட்டார்கள். இதில் ராணுவத்தினரின் வாகனங்கள் அடிக்கபட்டன. இதன் காரணமாக மூன்று மணி நேரம் அங்கு கலவரச் சூழல் இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மானிக் முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டினை பற்றி தனக்கு அறிக்கை கொடுக்குமாறு கேட்டிருக்கிறது. இச்சூழலில் உலகமெங்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு இங்குள்ள மக்கள் அனைவரும் சுதந்திரமாய் தங்களது ஊருக்கு செல்ல நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டுமென வற்புறுத்தியபடி இருக்கிறார்கள்.

தமிழக அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் பத்து பேர் கொண்ட குழு ஒன்று தற்போது இலங்கை முகாம்களை நேரடியாக பார்வையிட சென்றிருக்கிறது. கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுதர்ஸன நாச்சியப்பன், ஜே.எம்.ஆருண் உள்ளடக்கிய இந்த குழு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள முகாம்களை பார்வையிட்டு இருக்கிறார்கள். நாளை அவர்கள் வவூனியா முகாம்களுக்கு செல்கிறார்கள். இந்த நிலையில் இந்த குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு செல்வதற்கு கொடுக்கபட்டிருந்த அனுமதியினை இலங்கை அரசு ரத்து செய்து இருக்கிறது. இந்த குழுவினர் என்னென்ன கண்ணீர் கதைகளை நேரில் பார்க்க போகிறார்கள் என்பதையும் இவர்களது நேரடி பயணம் எத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more...

Tuesday, September 29, 2009

பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை


பக்கத்தில் படுத்திருக்கும் பெண்
யாரென தெரியவில்லை.
இருளை அகற்ற சுவிட்ச்
எங்கிருக்கிறது என புரியவில்லை.
இது என் வீடுமில்லை.
இங்கு இதற்கு முன் வந்ததாய்
ஞாபகமும் இல்லை.

என் துணிகளை தேடி
தரையில் கைகளால் துளாவிய போது
மீண்டும் வந்தது
மண்டைக்குள் அந்த நெளியும் புழு.

கண்கள் இருட்டின.
காதிலிருந்து இரத்தம் வழிந்தது.
அந்த புழு பெருத்து கொண்டு இருக்கிறது.
உடலெங்கும் வலி வியாபித்தது.
விஷ முற்கள் கடகடவென
உடலெங்கும் முளைக்க தொடங்குகின்றன.

முதுகு தண்டினில்
மற்றொரு புழு இப்போது நகர தொடங்குகிறது.
தரையில் படுத்து துடிக்கிறேன்.
எழுந்து நின்றால் சற்று வலி குறையும் என
எழுந்து நிற்கிறேன்.

எதையும் அறியாமல் நிர்வாணமாய்
தூங்கி கொண்டிருக்கும் அந்த பெண் யார் என
இப்போதும் புலப்படவில்லை.

காற்று தான் வலியை கொண்டு வருகிறதா?
ஜன்னலில் எட்டி பார்த்தேன்.
நான் நிற்பது கட்டாயம்
பத்து அல்லது பதினைந்தாவது மாடியாவது இருக்கும்.
இது கட்டாயம் என்னுடைய நகரமல்ல.

ஜன்னலில் ஏறி அமர்ந்தேன்.
என்னுடைய நிர்வாணம் இப்போது நடுங்க வைத்தது.
மீண்டும் புழு மண்டையில் நெளிய காத்திருந்தேன்.
அது நெளிய தொடங்கிய அந்த கணத்தில்
ஜன்னலில் இருந்து வெளியே குதித்தேன்.

Read more...

Sunday, September 20, 2009

தலித்தை கொளுத்தினார்கள்



இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சனை எது?
  • பாகிஸ்தானுடன் நீடிக்கும் மோதல் மனபோக்கு
  • நாட்டினுள் ஊடூருவி தொல்லைகள் கொடுக்கும் தீவிரவாதிகள்
  • உள்நாட்டு கலவரம் செய்யும் மாவோயிஸ்ட்டுகள்
  • கட்டுபடுத்த இயலா விலையேற்றம்
  • அரசு நிர்வாகத்தை அரித்து தின்று கொண்டிருக்கும் லஞ்சம்
  • சாதி பாகுபாடும் தலித் மற்றும் மலைவாசி மக்கள் மீதான வன்முறைகளும்

என்னை கேட்டால் சாதி தான் இந்தியாவின் மைய பிரச்சனை என்பேன். ஆயிரமாயிரம் காலமாய் சாதியால் எழுப்பப்பட்டு வந்த இந்த சமூகம் இன்று சாதிய பாகுபாடுகளால் அவலத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு சாட்சியாக இன்றும் இந்தியா எங்கும் சாதி பாகுபாடு காரணத்தால் எக்கச்சக்க வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பெரும்பாலனவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கபடுவதில்லை என்பது ஒரு பக்கம். பல சமயங்களில் பாதிக்கபட்டவர்களே காவல்துறையால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அல்லது கைது செய்யபடுகிறார்கள்.

மத்திய பிரதேச சம்பவம்
மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கிறது சிவ்புரி மாவட்டம். தலித்களுக்கு எதிரான வன்முறைகள் இங்கு அதிகம் நடப்பதுண்டு. சவ்புரியில் வசிக்கும் நாராயண் சிங் என்னும் 56 வயது தலித் ஒருவர் இந்த வாரம் உயிரோடு எரிக்கபட்டார். இன்று உயிருக்கு போராடிய நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கிறார். 70000 ரூபாய் கடனை திரும்ப செலுத்தவில்லை என்கிற காரணத்திற்காக கடன் கொடுத்தவரின் ஆட்கள் இந்த குற்றத்தை செய்தார்கள் என வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை காவல்துறை தேடி கொண்டிருக்கிறது.

தலித்களின் வறுமையில் பணம் சம்பாதிக்கும் வட்டிக்காரர்கள்
மத்திய பிரதேச சம்பவத்தில் மூன்று விஷயங்களை கவனிக்க முடியும். ஒன்று, தலித் மக்களை பெரும்பாலும் ஆட்டி படைக்கும் வட்டிக்காரர்கள். வறுமையில் இருக்கும் தலித் மக்களை குறி வைத்தே இயங்கும் வட்டிக்காரர்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். பெரும்பாலும் படிப்பறிவற்ற இம்மக்களிடையே சட்டத்திற்கு முரணாக அதிக வட்டிக்கு கடன் கொடுக்கபடுகிறது. கடன் செலுத்த தவறுபவர்களுக்கு அடித்தல், உதைத்தல், நிலத்தை பிடுங்குதல், நகைகளை களவாடுதல், இப்போது நடந்தது போல கொலை முயற்சி, கொலை, அந்த வீட்டு பெண்களிடம் பாலியல் சீண்டல் என சட்டத்திற்கு முரணான விஷயங்கள் அரங்கேறுகின்றன. தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவத்தை சில மாதங்களுக்கு முன்பு கேள்விபட்டேன். கடன் செலுத்த தவறிய காரணத்தினால், ஓர் ஆட்டோ டிரைவரின் மனைவியை தூக்கி கொண்டு போய் விட்டார்களாம் கடன்காரர்கள். இதை 'நடந்தது என்ன' நிகழ்ச்சியில் வெளிபடுத்துவதற்காக சம்பந்தபட்டவர்களை தேடிய போது துர்திர்வஷ்டமாக அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இப்படி வறுமையில் உழலும் மக்களை குறி வைத்து, அதிலும் குறிப்பாக தலித் மக்களை குறி வைத்து மிக பெரிய அளவில் வட்டிக்காரர்கள் இயங்குகிறார்கள் என்பது உண்மை.

தலித் மக்களின் நிலங்கள் களவாடபடுகின்றன
மத்திய பிரதேச சம்பவத்தை கவனிக்கும் போது குறிப்பிட வேண்டிய இன்னொரு பிரச்சனை நில அபகரிப்பு. இந்த சம்பவத்தில் நாராயண் சிங்கின் இரண்டு ஏக்கர் நிலத்தை கைபற்ற கடன் கொடுத்தவர் முயன்று இருக்கிறார். இதில் தான் ஆரம்பமாகி இருக்கிறது பிரச்சனை. சமீப வரலாற்றை புரட்டி பார்த்தால் தலித் மக்களின் நிலம் பல வகைகளில் அபரிதமாக வலுக்கட்டாயமாக பறிக்கபட்டிருப்பதை காணலாம். தலித் மக்களுக்காக ஒதுக்கபட்ட பஞ்சமி நிலத்தை பெரும்பாலும் இன்று சாதி இந்துகள் கையகபடுத்தி வைத்திருப்பது இதற்கு ஓர் உதாரணம்.

ஏன் எரிக்கிறார்கள்?
கடைசியாக இந்த விஷயத்தில் நான் எழுத விரும்புவது இது தான். எதற்காக எரிக்கிறார்கள்? ஊரில் பல பேர் முன்னிலையில் எதற்காக இப்படி ஒரு விபரீத தண்டனை? கிராமத்து சாதி இந்துக்கள் முன்னிலையில் தலித் இளைஞர்கள் பல வித அசிங்கங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். தலித் பெண்கள் நிர்வாணமாக்கபட்டிருக்கிறார்கள். பண்டிட் குயின் படத்தில் காட்டியது போல ஊரே சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போன்ற கொடூரங்கள் இந்தியாவில் நடந்திருக்கின்றன. ஊருக்கு நடுவில் இப்படி ஒரு கொடூரமான தண்டனை கொடுக்கும் போது அங்கிருக்கும் மற்ற தலித்கள் இனி காலத்திற்கும் வாய் பேச முடியாத, எதிர்ப்பை காட்ட முடியாத அளவு பயத்தில் உறைந்து போவார்கள். கொங்கோல் அரசர்களும் கிராமத்து பண்ணையார்கள் கண்டு பிடித்த முறை இது. 

"இனி நம்ம சாதி பொம்பளைங்க சாதி மாறி ஆசை வைக்க கூடாது" - கவிதை

தலித் மற்றும் மலைவாசி மக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க நாடு தழுவிய விழிப்புணர்வும், கிராமங்கள் தோறும் கண்காணிப்பு குழுக்களும், தொலை நோக்கு பார்வையாக இதற்கான திட்டங்களும் செயல்வடிவங்களும் போர்கால அவசரத்தில் இயற்றபட வேண்டும். இல்லையெனில் இன்னும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவது மட்டுமல்ல, இந்த நாடு காலத்தே பின்னோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை பிறகு யாராலும் தடுக்க முடியாமல் போய் விடும். அப்புறம் ச்சும்மா நகரத்து மத்திய வர்க்கத்தினரை ஏமாற்ற வேண்டுமானால் '2012இல் இந்தியா வல்லரசு ஆகும்' அல்லது 'ஜிடிபி எட்டினை கடக்கும்' போன்ற அர்த்தமில்லா பிரச்சாரத்தை பரப்பி கொண்டிருக்கலாம்.

நன்றி
புகைப்படம்: Fady Habib (புகைப்படக்காரர் தனது புகைப்படத்தை பற்றி சொன்னது - "பாகுபாடு நிறத்தினை வைத்து தொடங்குவதில்லை அது தனிபட்ட மனிதனின் மனநிலையால் உருவாகிறது. இந்த (புகைப்படத்தில் தோன்றும்) கை உறுதியை பற்றிய கற்பிதத்தினை உருவாக்கலாம். ஆனால் இது உண்மையில் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான விரல்களின் ஒற்றுமையால் உண்டானது என்பது புரிந்து கொள்ளபட வேண்டும்.)

Read more...

Wednesday, September 16, 2009

மாநில சுயாட்சி நமக்கு தேவையா?


கருணாநிதி மீண்டும் கோரிக்கை
நேற்று அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் மாநில சுயாட்சி பற்றி பேச்சை எடுத்து இருக்கிறார். தி.மு.கவின் தொடக்க காலத்தில் மாநில சுயாட்சி முக்கிய கொள்கையாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அதை அப்படியே மறந்து விட்டார்கள். எப்போதாவது இது போல கருணாநிதி மட்டும் இதை எங்காவது சொல்லி டெல்லிக்காரர்கள் வயிற்றில் புளியை கரைப்பார். ஆனால் இது வெறும் பூச்சாண்டி விஷயம் என இப்போது எல்லாருக்கும் தெளிவாகி இருக்கும்.

மாட்டி கொண்ட பிரணாப்
பாவம், பிரணாப் முகர்ஜியும் மேடையில் மாட்டி கொண்டார். 1970-ம் ஆண்டு தமிழகம் வந்த பிரணாப் எப்படி எல்லாம் அன்று மாநில சுயாட்சிக்காக வாதிட்டார் என்பதை கருணாநிதி நேற்று மேடையில் பேசிய போது பிரணாப் அதை கேட்டு அமைதியாய் இருந்தார் என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.

"அன்று நாம் சேர்ந்து போராடினோம். இன்று நீங்கள் கொடுக்கிற இடத்தில் இருக்கிறீர்கள்," என்று கருணாநிதி பேசியது பிரணாப்பிற்கு ஏண்டா இங்க வந்தோம் என்கிற எண்ணத்தை உண்டு செய்திருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

மாநில சுயாட்சி எளிதாக கிடைக்கும் கனியல்ல
கருணாநிதி மேடையிலே கேட்டார், பிரணாப் உடனே வழங்கினார் என்கிற மாதிரியான சுலபமான விஷயமில்லை இது. காஷ்மீருக்கு கொடுக்கபட்ட சிறப்பு அந்தஸ்தினையே கேள்வி கேட்கும் கட்சிகள் டெல்லியில் இருக்கும் சூழலில் மாநில சுயாட்சி என்கிற வார்த்தைகள் கூட அங்கு மற்றவர்கள் பேச தயங்கும் வார்த்தைகள் தாம். டெல்லியில் இருக்கும் Paranoia அப்படி.

ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பு, பிரிவினை கோரிக்கை என படுசூடாக இருந்த தமிழகத்தை இன்றும் டெல்லி உளவுதுறை ஒரு சந்தேக கண்ணோடு தான் பார்க்கிறார்கள். சமீபத்தில் ஈழத்தில் அதிகரித்த இனபடுகொலைகளுக்கு பிறகு தமிழகத்தில் எழுந்த ஆதரவு அலை மீண்டும் டெல்லிக்காரர்கள் மனதில் சந்தேக விதைகளை தூவி சென்றன. நார்மல் டெல்லிக்காரன் இன்றும் மதராஸ்காரர்கள் ரயில்வே போர்டில் ஹிந்தியை தார் பூசிய அழித்த அன்றைய நாளிதழ் புகைப்படங்களை மறக்கவில்லை.

மாநில சுயாட்சி என்பது தேவையா?
ஒரு கட்டுரை நினைவிற்கு வருகிறது. பாடப்புத்தகத்திலே படித்தது. குன்றக்குடி அடிகளார் எழுதியது என்று நினைக்கிறேன். ஓர் உலகம், ஒரு நாடு என்று தலைப்பு. அதாவது உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் இணைத்து ஒரே நாடாக மாற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என எழுதியிருந்தார். இராணுவத்திற்கு செலவாகும் பணத்தினை மிச்சம் பிடித்தாலே வறுமையை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பது போல எழுதியிருந்தார். ஆனால் இது படிப்பதற்கு உகந்த விஷயமாக இருந்தாலும், நடைமுறையில் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு சாத்தியமாகுமா என்பது கேள்வி குறியே.

வருங்காலத்தில் இருக்கிற நாடுகள் மேலும் உடைவதற்கான வாய்ப்புகளே அதிகம் என எங்கோ படித்த நினைவு இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல உலக நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் எதாவது ஒரு பிரிவினை கோரிக்கை இன்னும் உயிர்ப்புடனே இருக்கிறது.

அதிகார பரவலாக்கம்
Decentralized power என்பதற்கு தான் நான் ஆதரவு தெரிவிப்பது. மத்திய அரசும் அதிகளவு அதிகாரம் கொண்டிருக்க கூடாது. அது போல மாநில அரசும் அதிக அளவு அதிகாரம் வைத்திருக்க கூடாது.
அதிகார பரவலாக்கம் குறித்த எனது முந்தைய பதிவு வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?

உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சி அமைப்புகளாக செயல்பட வேண்டுமென நமது அரசமைப்பு சட்ட உறுப்பு 40-ன் மூலம் அரசு கொள்கையினை நெறிபடுத்தும் கோட்பாடு (Directive principles of state policy) சொன்னாலும் இன்று யதார்த்தத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பல் பிடுங்கபட்டவைகளாக அதிகாரங்கள் அற்றவையாகவே உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் தரும் விஷயத்தையே இன்னும் தமிழக அரசு பயத்துடன் அணுகி கொண்டிருக்கிறது.  எங்கே இது டெல்லிக்கு மீண்டும் வலு சேர்க்குமோ என்கிற பயம் தான் இதற்கு காரணமாக இருக்கலாம்.

என்னை கேட்டால், மாநில சுயாட்சியா தேவையா என்றால் கட்டாயம் தேவை என்பேன். ஆனால் மத்திய அரசு மாநில அரசிற்கு அதிகாரத்தை தருவது போல மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை தர வேண்டும்.

இன்னும் இதை விரிவாக்கி பார்த்தால் உலகமே ஒரு நாடாக மாறினால் கூட இது போன்ற decentralized power bodies தான் அதனை வலுபடுத்தும் என தோன்றுகிறது. அதிகார பரவலாக்கமே உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வரும். அப்போது தான் சாதாரண குடிமகனும் ஜனநாயகத்தால் பலனடைவான்.

நீங்கள் மாநில சுயாட்சி பற்றியும் அதிகார பரவலாக்கம் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள். உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் எழுதுங்கள்.

நன்றி
படம்: தமிழ் விக்கிபீடியா

Read more...

Tuesday, September 15, 2009

ஏன் ஒளித்து வைக்கிறீர்கள்?

எதிர்படும் ஒவ்வொருவரின் கண்களிலும்
ஒளிந்திருக்கிறது
கார்முகிலென சோகம்.

புன்னகையால் அவர்கள் தங்களது துயரத்தை
மறைக்க முயல்கிறார்கள்.
எனினும் அது எப்போதும் சாத்தியபடுவதில்லை.

வெளிவரும் அரிய கணங்களில்
ஒருவரது சோகம்
மற்றவரையும் தொற்றி கொள்கிறது.
அதனோடு குண்டூசிகளாய் குத்துகின்றன
ஏன் ஒளித்து வைக்கிறீர்கள் என்கிற
துன்பம்.

Read more...

Monday, September 14, 2009

உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: வெற்றி களிப்பில் ஒரு முத்தம்

வெற்றியின் களிப்பு ஒரு போதை. தன்னை தானே மறக்க வைத்து, அதிகமான தேனை அருந்திய வண்டாக, மயக்கமாய் சுற்றி வர செய்கிற விஷயம் வெற்றி.

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் நாள். அமெரிக்க அதிபர் ட்ரூமென், ஜப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததை அடுத்து அன்று காலை ஏழு மணிக்கு அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலக போர் முடிவிற்கு வந்ததை அறிவித்தார். போர் வெற்றி அமெரிக்கா நாடெங்கும் கொண்டாடபட்டது. நாடு ஜெயித்து விட்டதே என்கிற எண்ணம் ஒரு புறம். இனி இந்த போர் முடிவிற்கே வராதா என்கிற அளவு கடந்த ஏழு வருடங்களாய் உலகை உலுக்கி கொண்டிருந்த இரண்டாம் உலக போர் முடிவிற்கு வந்ததினை அடுத்து பெரிய நிம்மதி. படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் என எல்லாரும் அளவுகடந்த சந்தோஷத்தில் இருந்தனர்.

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூ யார்க் நகரத்திலும் வெற்றி எல்லா இடங்களிலும் கொண்டாடபட்டு கொண்டிருந்தது. இராணுவ வீரர்கள் அளவிற்கு அதிகமாக மதுவை குடித்து விட்டு நகரமெங்கும் சுற்றி கொண்டிருந்தார்கள். ஆல்பிரட் எய்ஸ்டென்ட் என்கிற புகைப்படக்காரர் வீதிகளில் மிதக்கும் புகழ் போதையையும் அதன் விளைவாய் மக்கள் என்றுமில்லாமல் வித்தியாசமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருப்பதையும் புகைப்படமாக எடுத்தபடி இருந்தார்.
"[நியூ யார்க் நகரத்தின்] டைம்ஸ் ஸ்கோயரில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தேன். கடற்படையை சார்ந்த ஒரு மாலுமி சாலையில் முரட்டுதனமாய் ஓடி வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். கண்ணில் படுகிற அத்தனை பெண்களை அவன் இழுத்து முத்தமிட்டு கொண்டிருந்தான். வயதான பெண்ணா? ஒல்லியா? குண்டா? இதை பற்றி எல்லாம் எந்த அக்கறையும் இல்லாமல் அவன் தன் கண்ணில் படுகிற ஒவ்வொரு பெண்ணையும் அணைத்து முத்தமிட்டான். நான் அந்த காட்சியை புகைப்படம் எடுப்பதற்காக அவனுக்கு முன்னால் ஓடி கொண்டு இருந்தேன். ஆனால் சரியான சூழல் அமையவில்லை. ஒரு நொடி பொழுதில் வெள்ளையாய் எதோ அவனிடம் சிக்கியிருப்பதை கண்டேன். நான் உடனடியாக திரும்பி, அந்த மாலுமி ஒரு [இளம் நர்ஸ்] பெண்ணை முத்தமிட்ட அந்த நொடியை புகைப்படம் எடுத்தேன். அந்த பெண் கறுப்பான உடை அணிந்து இருந்திருந்தால் நான் அந்த காட்சியை புகைப்படமாய் எடுத்திருக்கவே மாட்டேன். அல்லது அந்த மாலுமி வெள்ளை உடை அணிந்திருந்தால் இந்த புகைப்படம் சாத்தியமாகி இருக்காது. நான் நான்கு புகைப்படங்கள் எடுத்தேன். ஒன்று தான் திருப்தியாக இருந்தது. மற்றவற்றில் மாலுமியின் உருவம் சரியானபடி பதிவாக இல்லை." - புகைப்படக்காரர் ஆல்பிரட் எய்ஸ்டென்ட்
ஒரு வாரம் கழித்து லைப் பத்திரிக்கையில் இந்த புகைப்படம் வெளியானது. வெற்றி என பெயரிட்டு பிரத்யேக பனிரெண்டு பக்க புகைப்பட சிறப்பிதழில் வெளியான இந்த புகைப்படம் உடனே புகழ் பெற்றது. இந்த சிறப்பிதழில் இந்த புகைப்படத்துடன் மேலும் சில முத்தக்காட்சிகள் வெவ்வேறு நகரங்களில் வெற்றி கொண்டாடங்களின் போது எடுக்கபட்டவை பிரசுரிக்கபட்டு இருந்தன. அடுத்த நாளே நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் புகைப்படக்காரர் ஆல்பிரட் எய்ஸ்டென்ட் எடுத்த அதே காட்சியை இன்னொரு புகைப்படக்காரர் எடுக்க புகைப்படம் பிரசுரமானது. ஆனால் இந்த புகைப்படம் ஆல்பிரட் எய்ஸ்டென்ட்டின் படமளவு புகழ் பெறவில்லை. காரணம் இதில் வெளிச்சம் சற்று குறைவாக இருந்தது, அதோடு நியூ யார்க் டைம்ஸ் ஸ்கோயர் இதில் தெளிவாக இடம் பெறவில்லை. மாலுமியும் நர்ஸூம் முழுமையாக தெரியவில்லை.
ஆல்பிரட் எய்ஸ்டென்ட் எடுத்த இந்த புகைப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. 1995-ம் ஆண்டு அவர் இறக்கும் வரை அவர் புகழ் பெற்ற புகைப்படக்காராக கருதபட்டார். அவர் போகுமிடமெல்லாம் மக்கள் அவரிடம் இந்த புகைப்படத்தின் பிரதியில் அவரது கையெழுத்தை பெற்று கொண்டார்கள். பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது அவரையும் அவரது குடும்பத்தாரையும் பிரத்யேகமாக புகைப்படங்கள் எடுத்து கொடுக்குமளவு அவரது செல்வாக்கு உயர்ந்திருந்தது. தற்போது கொலம்பிய பல்கலைகழகம் இவரது பெயரில் சிறந்த பத்திரிக்கை புகைப்படங்களுக்கு விருது வழங்குகிறது.

சரி, புகழ் பெற்ற இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த மாலுமியும் நர்ஸும் யார்? ஆல்பிரட் எய்ஸ்டென்ட் அன்றைய அவசரத்தில் அவர்களை பற்றிய எந்த குறிப்பும் எடுத்திருக்கவில்லை.  1980-ம் ஆண்டு ஆல்பிரட் எய்ஸ்டென்ட்டை எடித் சைன் என்கிற பெண் தொடர்பு கொண்டார். படத்தில் இடம் பெற்றிருக்கும் நர்ஸ் நான் தான் என்றார்.
இதனையடுத்து லைப் பத்திரிக்கை 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் இதழில் இந்த புகைப்படத்தில் இருக்கும் மாலுமி தங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவித்தது. இதனை தொடர்ந்து இந்த புகைப்படத்தில் இடம் பெற்றது நாங்கள் தான் என சொல்லி மூன்று பெண்கள், பதினொரு ஆண்கள் வந்தார்கள். முதலில் வந்த எடித் சைன் தான் அந்த நர்ஸ் என பரவலாக நம்பப்படுகிறது. ஆண்களிடையே இந்த மாலுமி நான் தான் என அப்போது யாராலும் உறுதியாக நிருபிக்க முடியவில்லை. என்றாலும் 2007-ம் ஆண்டு கிளன் மெக்டப்பே என்கிற புது நபர் நான் தான் அந்த மாலுமி என அறிவித்தார். தடயவியல் அறிவியல் துறையில் உள்ள அறிஞர் ஒருவரும் கிளன் மெக்டப்பே தான் அந்த மாலுமியாக இருக்க வாய்ப்புண்டு என்று பலத்த நவீன தொழில்நுட்ப ஆய்விற்கு பின் அறிவித்தார்.

2007-ம் ஆண்டு நூற்றுக்கு மேற்பட்ட ஜோடிகள் வெற்றியை நினைவுபடுத்த இந்த புகைப்படத்தில் இருந்த காட்சியை மீண்டும் ஒரு முறை நிஜமாக்கினார்கள்.

பல புத்தகங்கள், திரைப்படங்கள் என உலகப்புகழ் பெற்ற இந்த புகைப்படம் இன்றும் வெற்றியின் களிப்பை கவித்துவமாய் உணர்த்தியபடி இருக்கிறது.

Read more...

Saturday, September 12, 2009

உத்தபுரமும் காம்ரேடுகளும்

இன்று கம்யூனிஸ்ட் தலைவர் [சிபிஎம்] பிருந்தா காரத் உத்தபுரம் கிராமத்திற்கு சென்றார். அதற்கு முன்பு காலையில் காவல்துறையினர் அவரையும் அவருடன் இருந்த காம்ரேடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து இருக்கிறார்கள்.

உத்தபுரம் கிராமத்தில் நிலவும் பிரச்சனை பற்றி அறியாதவர்கள் இங்கே படிக்கவும்.

சமீப காலமாக காம்ரேடுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தலித் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். முக்கியமாக சிபிஎம் கட்சியினர். உத்தபுரம் கிராமம் விஷயத்தில் கூட பிரகாஷ் கரத் தொடங்கி பலர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது கட்டாயம் பாராட்டபட வேண்டிய விஷயம். என்றாலும்...

கம்யூனிச கட்சிகளில் சாதி பாகுபாடு பல ஆண்டுகளாக இருக்கிறது என பல சமயங்களில் பல தலித் நல ஆர்வலர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள். காலம் காலமாக உயர்சாதியினர் மட்டுமே கட்சியின் உயர் பொறுப்புகளை பிடித்து இருந்தார்கள் என சொல்லபடும் குற்றசாட்டை அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது. அப்படி இருக்க இன்று கட்சி நலிவுறும் சமயத்தில் தனது பிடியை இறுக்கி கொள்ள இந்த வகை நடவடிக்கைகளில் காம்ரேடுகள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்களா என்கிற கேள்வி எழுப்புவதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படியல்ல இன்று தலித் மற்றும் சாதி பாகுபாடு பற்றிய உணர்வு அதிகரித்து உள்ளது, அதனுடைய வெளிபாடு இது என்று கூட காம்ரேடுகள் இதற்கு தன்னிலை விளக்கம் சொல்லக்கூடும். காரணங்கள் எதுவாய் இருந்தாலும் இத்தகைய போக்கினை இவர்கள் இதற்கு முன்னரே செய்து இருந்தார்கள் எனில் கட்சியின் சரிவை கொஞ்சமாவது கட்டுபடுத்தி இருக்கலாம்.

காம்ரேடுகளின் ஆர்வம் ஒருபுறம் இருக்கட்டும், உத்தபுரம் பற்றி பிருந்தா காரத் சொன்ன ஒரு விஷயம் கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது.

"திமுக தலித்களின் நலனை காக்க முற்றிலுமாய் தவறி விட்டது. தலித்களுக்கு சமமான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு பதில் அவர்களுக்கு தனி வசதிகளை ஏற்படுத்தி அவர்களை பாகுபடுத்தி விட்டது," என்று குற்றம் சாட்டியிருக்கிறார் பிருந்தா காரத்.
அவர் சொன்னது உண்மை தான். உத்தபுரத்தில் இன்று தனி தனி பள்ளிகூடங்கள், தனி ரேஷன் கடை என அரசாங்கம் ஏற்படுத்தி இருப்பது உண்மை. அரசாங்கத்தை பொறுத்தவரை இந்த பிரச்சனைக்கான நிரந்தர தீர்வினை விட இது உடனே பற்றி எரிய கூடாது என்பதிலே அதிக அக்கறை இருக்கிறது. இதனாலே கூட இந்த கிராமத்தினை பற்றிய செய்திகள் வெளிவர தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் [1989ம் ஆண்டில் இருந்தே மோதல்கள் நடக்கின்றன] இன்னும் தீர்வு அல்லது தீர்விற்கான பாதை புலனாகவில்லை.

கவனிக்கபட வேண்டிய மற்றொரு விஷயம், காவல்துறையினர் இன்று ஏன் காம்ரேடுகளை கைது செய்ய வேண்டும். கலவரம் வராமல் தடுக்கவாம். பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய விஷயம் தான் இப்போது நினைவிற்கு வருகிறது. ஊரில் காலம் காலமாக சாதி பாகுபாடு இருக்கும். தலித்களை கேவலமான நிலையில் வைத்து இருப்பார்கள். திடீரென அரசியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மூலம் அங்குள்ள இளைஞர்கள் சிலர் சலசலப்பை ஏற்படுத்த தொடங்குவார்கள். கிராமத்தில் கேள்விகள் எழுப்பப்படும் போது பிரச்சனைகளும் அதனுடன் எழுவது உண்மை தானே. அப்போது காவல்நிலையத்திற்கு நீங்கள் போனால், "ஊரு அமைதியா தான் இருந்தது. இந்த விடுதலை சிறுத்தைங்க வந்தாங்க, ஊருல அமைதி கெட்டுச்சி," என்று சலித்து கொள்வார்கள்.

இங்கு யாருமே நிரந்தர தீர்விற்கு முனைவதில்லை. முக்கியமாக அரசாங்கம் தன்னளவில் இப்போதைக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தால் போதும் என நினைக்கிறது. இதனால் பல பிரச்சனைகள் தீர்வதற்கு பதில் என்றாவது வெடிப்பதற்கு நெருப்பு கங்குகளுடன் தயாராக இருக்கின்றன. உத்தபுரம் அதில் ஒன்று. 
நன்றி
முதல் படம்: தி ஹிந்து
இரண்டாவது படம்: rediff news

Read more...

Tuesday, September 8, 2009

ரோட்ல டிராபிக் ஜாம் பண்ணிட்டாளே கிழவி

கோலி குண்டுகளாய் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்
உருண்டோடும் பரந்த நகரத்து சாலை.
எப்போதும் போல  இப்போதும் டிராபிக் ஜாம்.

இந்த முறை காரணம் ஒரு கிழவி.
பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது.
சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள்.
பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள்.

பைத்தியமா அவள்?

சாலையில் என்னவோ செய்து கொண்டிருக்கிறாள்.
அவளருகே அறுந்து போன மஞ்சள் பை.
சாலையில் பையிலிருந்து கொட்டிய அரிசி.
வசையொலி கூடியபடி இருக்கிறது.
அரிசியை அள்ளி மீண்டும் பையினுள் திணித்து விடும்
முனைப்பில் இருக்கிறாள் கிழவி.

Read more...

மறுமொழிகள்

Sai's shared items

Nadanthathu Enna's Fan Box

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP