Loading

Sunday, December 28, 2008

அதிகாரம் ஆணையிட்டால் மக்கள் கொல்லவும் துணிவார்கள் - ஆய்வு முடிவு

நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது.

அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு முடிவினை 1963-ம் ஆண்டே யேல் பல்கலைகழகத்தை சேர்ந்த ஸ்டான்லி மில்கிராம் என்பவர் வெளியிட்டார். சர்ச்சைக்கு ஆளான இந்த ஆய்வு முடிவு இப்போது மீண்டும் செய்திகளில் அடிபட தொடங்கியிருக்கிறது.

மிக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் கூட கலவரங்கள் நடக்கும் போது சட்டென எதிர் இனத்தவரை கொல்லும் கும்பலில் சேர்ந்து மிக கொடூரமான குற்றங்கள் புரிவது பற்றி இந்த ஆய்வு முடிவு விளக்க முயல்கிறது.

அதிகாரம் என்பது ஒரு கதாபாத்திரம் அல்ல
அதிகாரம் என்பது ஒரு நாட்டின் ராணுவ அதிகாரியையோ அல்லது ஒரு குழுவின் தலைவனை மட்டும் குறிப்பதல்ல. ஒரு சிறு அலுவலகத்தில் இருக்கும் சிடுமூஞ்சி மேனேஜர், பள்ளிக்கூடத்தில் மாணவர்களை பயமுறுத்தும் வாத்தியார், வீட்டில் பிள்ளையை மிரட்டும் தந்தை இவர்கள் எல்லாருமே அதிகாரங்கள் தாம். ஓர் இடத்தில் அதிகாரம் செலுத்துபவராய் இருப்பவர் மற்றொரு இடத்தில் அதிகாரத்திற்கு பயந்தவராய் இருக்கவும் நேரிடுகிறது. அதிகாரம் குறித்த பயமும், அதிகாரம் கிடைத்தால் அதனை துஷ்பிரயோகம் செய்வதும் மனிதர்களிடையே பரவலாய் நடப்பது தானே.

மக்கள் தங்கள் வாழ்க்கைக்கென ஒரு மதீப்பீடு வைத்து இருக்கிறார்களா? அல்லது ஜனநெருக்கடி மிகுந்த தெருவில் கூட்டம் இடித்து கொண்டு முன்னேறும் பாதையில் தாங்களும் ஆற்றில் விழுந்த இலை போல போய் கொண்டிருக்கிறார்களா? இது தான் இன்று நம் முன் நிழலாடும் கேள்வி.

ஓவியம் - Marci Nick

Read more...

Tuesday, December 16, 2008

"இனி நம்ம சாதி பொம்பளைங்க சாதி மாறி ஆசை வைக்க கூடாது"

மண் புழுதி தெருவில் பறக்க
அந்த அக்காவை
அவர்கள் இழுத்து சென்ற காட்சியை
அவள் கண்டது ஐந்து வயது சிறுமியாக.

முப்பது நாற்பது வருடங்கள் உருண்டோடினாலும்
அந்த மண் புழுதி
இன்னும் மறையவே இல்லை.
அதோடு, "இனி நம்ம சாதி பொம்பளைங்க
சாதி மாறி ஆசை வைக்க கூடாது," என
அந்த பெண்ணின் மாமன்
சாராய வாடையோடு கர்ஜித்ததும்;
பெருங்குரலெடுத்து அந்த பெண்ணின் தாயார்
மண்டியிட்டு அழுததும்;
அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
கண்டெடுக்கபட்ட
கருகி போன அந்த அக்காவின் உடலும்
அவளை துரத்துகின்றன
ஒவ்வொரு முறையும்
அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்.

Read more...

Monday, December 15, 2008

புஷ்ஷின் மீது ஷு எறியபட்டதை பார்த்து சந்தோஷபட்டீர்களா நீங்கள்?

இன்று காலை நான் தூங்கி விழித்த போது என் படுக்கைக்கு நேர் எதிரில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ஷுவை எறிந்த காட்சி ஒளிபரப்பாவதை பார்த்தேன். இப்படியாக இந்த காட்சியை பார்த்து என்னுடைய நாள் தொடங்கியது குறித்து ஏனோ எனக்குள் ஒரு மகிழ்ச்சி.

எதற்காக இந்த மகிழ்ச்சி?

இன்று முழுவதும் நான் சந்தித்த மனிதர்கள் பல பேர் இந்த காட்சியினை கண்டு சந்தோஷபட்டதை பார்த்தேன். யாரும் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்கள் கிடையாது. உலகிலே மிகுந்த அதிகாரமுள்ள ஒருவர் மீது ஷு எறியும் துணிவுள்ளவரை பற்றிய வியப்பும் அல்ல இது. பலருடைய மனதில் இருக்கும் பெருங்கதையாடல் குறித்த கோபம் தான் இப்படி வெளிபடுவதாய் நினைக்கிறேன். அல்லது அதிகாரத்தின் மீதான சராசரி மனிதனுக்கு இருக்கும் கோபத்தின் வெளிபாடு தான் இந்த காட்சி குறித்தான மகிழ்ச்சி என்று நினைக்கிறேன்.

-----

முன்டேசர் அல் சய்தி! ஈராக்கில் உள்ள அல் பாக்தாத்தியா என்கிற தொலைக்காட்சி நிறுவனத்தில் பத்திரிக்கையாளராக வேலை பார்த்து வருபவர். கடந்த வருடம் தீவிரவாதிகளால் கடத்தபட்டு மூன்று நாட்கள் கழித்து விடுவிக்கபட்டார்.

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து அடுத்த மாதம் விலக இருக்கும் ஜார்ஜ் புஷ் 2003-ம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்தது மூலம் அந்த பகுதியில் அதிகமாய் வெறுக்கபடும் மனிதராய் இருக்கிறார். இச்சூழலில் கடைசி முறையாக அமெரிக்க அதிபராக ஈராக்கிற்கு வருகை தந்த போது இந்த அவமானம் நிகழ்ந்தது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் புஷ் பேசி முடித்தவுடன் அல் சய்தி தனது இருக்கையிலிருந்து எழுந்திருத்து, "நாயே இந்தா எங்களது பிரிவு உபசார பரிசு," என கத்தியபடி தனது இரண்டு ஷுக்களையும் ஒன்றன் பிறகு ஒன்றாக புஷ்ஷை நோக்கி எறிந்தார். புஷ்ஷின் மேல் அவை விழவில்லை. அவர் குனிந்து தப்பித்து கொண்டார்.

"ஈராக்கில் கொல்லபட்டவர்களுக்காக, அனாதை ஆக்கபட்டவர்களுக்காக, விதவையாக்கபட்டவர்களுக்காக," என அல் சய்தி ஷுவை எறியும் போது கத்தினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவரை பார்த்து ஷுவை காட்டுவது அவமானங்களின் உச்சம். அதை விட அவமானத்தின் உச்சம் ஒருவர் மீது ஷுவை எறிவது.

இப்போது ஈராக்கில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அல் சய்தி ஒரு ஹீரோவாக பார்க்கபடுகிறார். பல இடங்களில் மக்கள் ஒன்று கூடி அல் சய்தி விடுதலை செய்யபட வேண்டுமென போராட்டம் நடத்துகிறார்கள்.

சவுதியில் உள்ள சமூக அரசியல் பேராசிரியர் காலித் அல் தக்கில் என்பவர் இந்த சம்பவம் புஷ் ஈராக்கில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் எதிரொலி என குறிப்பிட்டு இருக்கிறார்.

-----

நீங்கள் சந்தோஷப்பட்டீர்களா? அல்லது புஷ்ஷிற்காக பரிதாபப்பட்டீர்களா? காட்சியை கண்டவுடன் அடுத்த நொடி உங்கள் மனதில் தோன்றிய உணர்ச்சியை கேட்கிறேன்.

Read more...

Wednesday, December 10, 2008

டைம் இதழின் '2008-ம் ஆண்டின் சிறந்த பத்து புகைப்படங்கள்'

1. பிரச்சாரத்தின் பிம்பம்
புகைப்படக்காரர் - கிரிஸ்டோபர் மோரிஸ்
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த அதிபர் பதவிக்கான தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கான பிரச்சாரம் வரலாறு காணாத வகையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மெக் கைன் தான் நிகழ்த்த இருக்கும் உரைக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்த போது அவரது மனைவி சிண்டி, ஓட்டல் அறையில் வெள்ளை வைனை அருந்தியவாறு கணவருக்காக காத்திருந்தார்.
-----


பெல்ப்ஸ் சாதனை
புகைப்படக்காரர் - ஹன்ஸ் லுடைமியர்
இந்த ஆண்டு சீனாவில் நடத்தப்பட்ட ஓலிம்பிக் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் போட்டி வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் உலக சாதனையாக அதிகளவு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அவரது ஏழாவது தங்கப்பதக்கம் நூறு மீட்டர் பட்டர்ஃபளை நீச்சலில் கிடைத்தது. இதில் அவருக்கு அடுத்ததாக வந்த செர்பிய நாட்டு நீச்சல் வீரர் மிலோரட் கேவிக்கிற்கும் அவருக்கும் இருந்த வித்தியாசம் வெறும் .01 விநாடிகள் தாம்.
-----


சீயோனின் குழந்தைகள்
புகைப்படக்காரர் - ஸ்டெபானி சின்கலர்
அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனிப்பிரிவு கிருஸ்துவ சர்ச் நிர்வாகம் ஒன்றின் மீது குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் நடப்பதாக குற்றம் சாட்டபட்டது. இதனை தொடர்ந்து அங்கு ரெய்டு நிகழ்த்தபட்டது. கடுமையான விதிமுறைகள் கொண்ட இந்த சமூகத்தினுள் நடப்பதை படம் பிடிக்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் புகைப்படக்காரர் ஸ்டெபானி சின்கலருக்கு வாய்த்தது. ஒரு சிறுமி தனது விளையாட்டு திறமையை காண்பிக்க்கும போது எடுக்கப்பட்ட படம்.
-----


மணலில் வரையப்பட்ட கோடு
புகைப்படக்காரர் - ஆண்டனி சூவா
அமெரிக்காவிற்கும் அதன் அண்டை நாடான மெக்ஸிகோவிற்கும் இடையே ஒரு நீண்ட சுவர் பல வருட பேச்சு வார்த்தைக்கு பிறகு கட்டப்பட்டு வருகிறது. 1.2 மில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த சுவரின் ஒரு பகுதி அரிசோனா மாகணத்தின் சான் லுயிஸ் பாலைவனத்தில் உள்ளது. அதனை அமெரிக்க எல்லை ரோந்து படையினர் பார்வையிடுகிறார்கள்.
-----


இழுத்து செல்லபட்டவை
புகைப்படக்காரர் - பிரியான் ரே
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜுன் மாதம் வெள்ளம் கரை புரண்டோடியது. ஓரிடத்தில் ஆற்றங்கரையில் இருந்த வீடுகள் ரயில்வே பாலத்திற்கு கீழே வரை அடித்து செல்லபட்டன.
-----


இடிப்பாடுகளுக்கு நடுவே
புகைப்படம் - கலர் சைனா போட்டோ நிறுவனம்
சீனாவில் உள்ள சீயோசன் மாகணத்தில் இந்த ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தில் 87,000 பேர் உயிர் இழந்தார்கள். மீட்பு பணியில் இருந்தவர்கள் பல நாட்கள் யாரேனும் உயிர் பிழைத்து இருப்பார்களா என தேடுதல் பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். மியான்யங் பகுதியில் இடிந்த கட்டிடத்தினுள் இருந்து காயமடைந்த ஒருவரை மீட்டு வருகிறார்கள்.
-----
கவனிக்கபடாதவை
புகைப்படக்காரர் - யூரி கோஸிரிவ்
தென் ஓசோட்டியா தனிநாடு கோரிக்கை கேட்டதை தொடர்ந்து ரஷ்யாவிற்கும் ஜார்ஜியாவிற்கும் இடையில் உரசலும் மோதலும் முற்றியது. மோதலில் இறந்து போன ஜார்ஜியா நாட்டு போர்வீரர்களின் உடல்கள் ஐந்து நாட்கள் ஆகியும் புதைக்கபடாமல் சவப்பெட்டியிலே இருக்கின்றன. டைம் இதழின் புகைப்படக்காரர் யூரி கோஸிரிவ் அங்கிருந்த அரசு அலுவலர்களிடம் கேட்ட போது, புதைக்க போதுமான வசதிகள் இன்னும் வந்து சேரவில்லை என்கிற பதிலே கிடைத்தது. ஆனால் அதே நாளன்று ஜார்ஜியாவில் உள்ள பழங்குடியினர் வீடுகளை இயந்திரங்கள் இடித்து தள்ளியதை புகைப்படக்காரர் பார்த்தார்.
-----
முகமூடி மனிதன்
புகைப்படக்காரர் - ஜேரோம் டிலே
ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் மீண்டும் இராணுவத்தினருக்கும் புரட்சியாளர்களுக்கும் நடுவே சண்டை முற்றியது. நாட்டின் கிழக்கு பகுதியெங்கும் நடந்த உக்கிர சண்டை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர நேர்ந்தது.
-----


கைக்குலுக்கல்
புகைப்படக்காரர் - ஜெர்ரி மோரிசன்
2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் இராக்கிலிருந்து வெளியேறுவதாக புது பாதுகாப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ் பாக்தாத்தில் உள்ள கேம்ப் விக்டரியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நகரத்தை மண் சூறாவளி முற்றுக்கையிட்டுருந்தது.
-----


தாயும் சேயும்
புகைப்படக்காரர் - அலெக்சாண்டரா வெசினா
ஆப்கானிஸ்தானில் உள்ள படாகஸ்தான் மாகணத்தில் வாழும் சயாமய் என்னும் பெண் தன் ஒரு மாத குழந்தைக்கு தாய்பால் கொடுக்கிறார். வளர்ச்சியின் நிழல் படியாத இந்த மலை பிரதேசதம் தான் உலகத்திலே அதிக பிரசவ மரணங்கள் நடக்கும் இடமாக விளங்குகிறது.
-----

மேலதிக விவரங்களுக்கு - டைம் இதழில் வெளிவந்த தொகுப்பு

Read more...

Tuesday, December 9, 2008

மரண தேவதை விழித்து இருக்கிறாள்

பனை மரங்கள் ஆடி ஓய்ந்த
சூறாவளி நாளுக்கு அடுத்த தினம்.

இப்போது தான் எல்லையருகே வந்து இருக்கிறேன்.
சூறாவளியை போர்வையாய் போர்த்தி
எல்லை தாண்டலாம் என்கிற கனவு
இனி பலிக்காது.

துப்பாக்கி ஏந்தி ஒரு காக்கி கூட்டம்
எறும்பு வரிசையாய் தூரத்தில் தெரிகிறது.

ஆத்மாக்களை பிழிந்து உருவாக்கிய
முறுக்கு கம்பிகள்
இரத்த வாடையுடன் நீளமான கோடு கிழித்து
காத்து இருக்கின்றன.
வேலியினூடாக
மின்சார தெரிப்பு மின்னலாய் நெருப்பினை
துப்பி துப்பி தயாராகி விட்டன.

நான் ஓட வேண்டும்.
அவகாசமில்லை.

மழை தெளித்த வீட்டின் முகப்பில்
தவளைகளின் பெருங்குரல்களுக்கு பின்னே
தன் அழுகையை ஓளித்து வைத்து
காத்து இருப்பாள் என் மனைவி
இறந்து போன மகளின் படத்தோடு.

Read more...

மறுமொழிகள்

Sai's shared items

Nadanthathu Enna's Fan Box

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP